நியூ டவுனாக மாறுகிறது செங்கல்பட்டு.. “ஆபரேஷன் 25”.
சென்னை: சென்னைக்கு அருகே இருந்தும்.. சென்னையின் நுழைவு வாயில் போல இருந்தும் கூட செங்கல்பட்டு இத்தனை காலமாக கவனிக்கப்படாமல் இருந்தது.
மோசமான சாலைகள், போதுமான திடக்கழிவு மேலாண்மை இல்லாதது, நிலத்தடி வடிகால் போன்ற அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாதது போன்ற காரணங்களால் நீண்ட காலமாக பாதிக்கப்பட்ட செங்கல்பட்டு இப்போது ஒரு மாற்றத்திற்கு தயாராக உள்ளது. சென்னை பெருநகர மேம்பாட்டு ஆணையம் (CMDA) நகரத்தை ஒரு நிலையான, ஸ்மார்ட் மற்றும் உள்ளடக்கிய நகர்ப்புற மையமாக மாற்றம் செய்வதற்கான திட்டங்களை கையில் எடுத்துள்ளது.
அகலமான தெருக்கள், நடைபாதை கொண்ட தெருக்கள், சுற்றுச்சூழலுக்கு உகந்த பாத்திகள் , திட்டமிடப்பட்ட குடியிருப்பு மண்டலங்கள், வணிக இடங்கள் மற்றும் செழிப்பான பொதுப் பகுதிகள் அனைத்தும் இங்கே அமைக்கப்பட உள்ளது. சென்னையுடன் தடையின்றி இணைக்கப்படும் வகையில் செங்கல்பட்டில் மாற்றங்களை செய்ய உள்ளனர். இதை உணர, செங்கல்பட்டு புதிய நகரத்திற்கான விரிவான மேம்பாட்டுத் திட்டத்தைத் தயாரிப்பதற்கான டெண்டர்களை CMDA வெளியிட்டு உள்ளது. 2025 முதல் 2045 வரை நகரத்தை எப்படி எல்லாம் முன்னேற்ற வேண்டும் என்று திட்டமிட்டு இந்த மாற்றங்களை செய்ய உள்ளனர்.
சென்னையைச் சார்ந்திருப்பதைக் குறைத்தல், உள்ளூர் வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் பிராந்திய பொருளாதார வளர்ச்சியை வளர்ப்பதே இதன் இலக்காகும். இந்த திட்டத்தில் செங்கல்பட்டு, திருக்கழுகுன்றம் மற்றும் திருப்போரூர் தாலுகாக்களைச் சேர்ந்த 60 கிராமங்கள் அடங்கும். இவை சென்னையின் நியூ டவுன் போல செயல்படும்.
அதேபோல் சென்னைக்கு அருகே ஆறாவது புதிய நகரமாக (செயற்கைக்கோள் நகரம்) மகாபலிபுரம் உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் கீழ் மாநில வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி சார்பாக இங்கே உயர்த்தப்பட உள்ள கிராமங்களின் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, வளவந்தாங்கல், சந்தானம்பட்டு, நெம்மேலி, கிருஷ்ணங்கரணை, திருப்போரூர், சலுவன்குப்பம், பட்டிப்புலம், தண்டலம், வெங்கலேரி, ஆலத்தூர், கருங்குழிப்பள்ளம், பையனூர், சிறுதாவூர், அதிகமநல்லூர், காரணை, பஞ்சானந்தூர், அமஞ்சான்பட்டி, அமஞ்சான்பட்டி, அமமுகநல்லூர், அமமுகநல்லூர், தஞ்சைநல்லுார், ஆகிய வருவாய் கிராமங்கள் கண்டறியப்பட்டுள்ளன. , கொக்கிலிமேடு, மகாபலிபுரம், பூஞ்சேரி, காடம்பாடி, மற்றும் பெருமளேரி-வடகடம்பாடி-நல்லான்பிள்ளைப்பெற்றல் ஆகிய 25 கிராமங்கள் உயர்த்தப்பட உள்ளன. இந்த கிராமங்கள் நகரங்களாக மாற்றப்பட்டு சர்வதேச தரத்திற்கு மாற்றப்பட உள்ளது. இங்கே இருக்கும் பழமையான புராதன சின்னங்களை பாதிக்காமல், சுற்றுலாவை மேம்படுத்தும் விதமாக சர்வதேச தரத்திற்கு மகாபலிபுரத்தை உயர்த்தும் திட்டத்தை கையில் எடுத்துள்ளனர். 25 கிராமங்கள் சர்வதேச தரத்திற்கு உயர்த்தும் நிலையில் மகாபலிபுரம் சென்னையின் புதிய துணை நகரமாக, துணை அடையாளமாக மாறும், இங்கே முதலீடுகள் குவியும், போக்குவரத்து அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.
பெரும்பொருட்செலவில் மாமல்லபுரத்தில் துணை கோள் நகரம் கொண்டு வர முடிவு செய்துள்ளனர். சென்னைக்கு மிக அருகில் மாமல்லபுரம் உள்ளது. நிறைய கடல் வளம் உள்ளது. வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் பகுதியாக உள்ளது. இங்கே துணைக்கோள் நகரம் வரும் பட்சத்தில் இந்த மாமல்லபுரம் மின்சார ரயிலுடன் இணைக்கப்படும். மெட்ரோவும் கூட இங்கே எதிர்காலத்தில் வர உள்ளது. மெட்ரோ பணிகள் இந்த 20 ஆண்டுகளில் இங்கும் முடிக்கப்படும். தற்போது இங்கே நியூ டவுன் அமைப்பதற்கான கன்சல்டன்சி பணிகளுக்கு டெண்டர் விடுக்கப்பட உள்ளது . விரைவில் இதற்கான திட்ட அறிக்கை வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னைக்கு இணையாக சர்வதேச தரத்தில் மாமல்லபுரம் மற்றும் செங்கல்பட்டு இதன் மூலம் உயர்த்தப்படும். அண்ணா சாலை போல பெரிய சாலைகள், உயர் கட்டிடங்கள், சுற்றுலா அமைப்புகள் இங்கே உருவாக்கப்படும்.