News about Chennai Real Estate

Check out market updates

சென்னையில் அதிகரித்து வரும் வீடு மற்றும் நிலத்தின் மதிப்பு,சென்னையில் வீடு, நிலம் வாங்க சரியான நேரம்.

தேசிய வீட்டுவசதி வங்கியின் ரியல் எஸ்டேட் புள்ளி விபரம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

4 மாதங்களுக்கு முன்பு, சென்னையின் நில மதிப்பு உயர்ந்துவிட்டதாக ரியல் எஸ்டேட் தரப்பில் ஒரு செய்தி வெளியாகியிருந்தது.. அதாவது, மெட்ரோ ரெயில் பாதை செல்லும் பகுதிகளை சுற்றியுள்ள இடங்களின் சொத்து மதிப்பு திடீரென 30 சதவீதம் முதல் 40 சதவீதம் வரையும், மற்ற பகுதிகளை காட்டிலும் மெட்ரோ ஸ்டேஷன் பகுதிகளில், 50 சதவீதம் வரை சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது.

பத்து வருடங்களுக்கு முன்பு வடபழனியில் சதுரடி ரூ.7,900 என்றிருந்தது, இப்போது, ரூ.10 ஆயிரத்துக்கும், கோயம்பேட்டில் சதுரடி 7000 ரூபாயிலிருந்து கிட்டத்தட்ட 9 ஆயிரம் ரூபாய்க்கும், சைதாப்பேட்டையில் ரூ.9,500-லிருந்து 12 ஆயிரம் ரூபாயாகவும் உயர்ந்துவிட்டது.கீழ்ப்பாக்கத்தில் சதுரடி ரூ.11,600 என்றிருந்தது தற்போது ரூ.13,200 ஆகிவிட்டது.ஆக, சராசரியாக இடத்தின் மதிப்பு 30 – 40 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளதாக தெரிகிறது.

அண்ணாசாலை: இந்த பகுதிகளே இப்படி என்றால், அண்ணாசாலை பகுதியில், அதற்கு மேல் விலை கூடிவருகிறது. ஓஎம்ஆர் ராஜீவ்காந்தி சாலையிலும், 30 சதவீதம் அளவுக்கு நிலத்தின் மதிப்பு உயர்ந்துள்ளது.

வடசென்னை, தென் சென்னையின் பல்வேறு இடங்கள் மாதவரம், சோழிங்கநல்லூர், பூந்தமல்லி, போரூர் போன்ற இடங்களில் சொத்து மதிப்பு திடீரென 40 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது.

வளர்ச்சி பெறாத இடமாக கருதப்பட்ட வடசென்னையின் பகுதிகள் இன்று பிரம்மாண்டமாக வளர்ந்துள்ளதாகவும், திருவொற்றியூர், மாதவரம் பகுதிகளுக்கு மெட்ரோ ரெயில் சேவை வந்த காரணத்தினாலேயே, இந்த இடத்தின் மதிப்பு பல மடங்கு அதிகரித்து விட்டதாகவும் புள்ளிவிரங்கள் கூறுகின்றன.

இப்படிப்பட்ட சூழலில், சென்னை, கோவை போன்ற நகரங்களில் வீடுகளின் விலைப்புள்ளிகள் தொடர்ந்து உயர்ந்து வருவதாக, தேசிய வீட்டுவசதி வங்கியின் ரியல் எஸ்டேட் புள்ளி விபர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில், தேசிய வீட்டுவசதி வங்கி செயல்பட்டு வருகிறது.. வீட்டுவசதி நிதி நிறுவனங்களை கட்டுப்படுத்தும் அமைப்பாக இது செயல்படுகிறது.

வீட்டு வசதி வாரியம்: இந்தியாவில், மொத்தம் 50 நகரங்களில் வீடுகளின் விலைகளில் ஏற்படும் மாற்றங்கள் தொடர்பான விலை புள்ளி விபரங்களை, தேசிய வீட்டு வசதி வங்கி தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. வீடுகளின் விற்பனை விலைகள் காலாண்டுக்கு அடிப்படையிலும் ஒப்பிடப்பட்டு புள்ளிகள் கணக்கிடப்படுகின்றன.

அந்தவகையில், தேசிய வீட்டுவசதி வங்கி அறிக்கையில், “கடந்த 2022 டிசம்பர் நிலவரத்தைவிட, 2023 டிசம்பரில் விலை புள்ளிகள் 4.7 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. தமிழகத்தில் ஆண்டு மாற்றம் அடிப்படையில் கணக்கிடும்போது, சென்னையில் வீடுகளின் விலை புள்ளிகள், 3.8 சதவீதம் வரை உயர்ந்துள்ளன.

சென்னையில் கட்டுமான நிலையில் உள்ள வீடுகளின் சராசரி விலை, 2022 டிசம்பர் நிலவரப்படி, சதுர அடி, 11,301 ரூபாயாக இருந்தது. இது, 2023 டிசம்பர் இறுதியில், 11,650 ரூபாயாக உயர்ந்துள்ளது. கோவையில், 2022 டிசம்பர் நிலவரப்படி, சதுர அடி, 7,262 ரூபாயாக இருந்த விலை 2023 டிசம்பர் இறுதியில், சதுர அடி 8,343 ரூபாயாக உயர்ந்துள்ளது” என்று தேசிய வீட்டுவசதி வங்கியின் வெப்சைட்டில் வெளியிடப்பட்டுள்ளது.